உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கோட்டாவை அதிகரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என அதன் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இந்த கலந்துரையாடலின் போது, ​​எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது எமக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சினை எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு டொலர்கள் தேவைப்படுவதேயாகும். டொலர்களை கொள்வனவு செய்வதற்கு இலங்கையின் பணம் தேவைப்படுகின்றது. எரிபொருள் கொள்வனவுக்கு எமக்கு தேவையான ரூபாய்கள் எங்களிடம் இல்லை. நாங்கள் அதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம்.”

கேள்வி – வேட்பாளர்களின் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு ஏதேனும் ஏற்பாடுகள் உள்ளதா?”

இதுபோன்ற கோரிக்கைகள் உள்ளன, ஆனால் நாங்கள் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இலங்கையின் எண்ணெய் தேவை சுமார் 40% குறைந்துள்ளது. அந்த கோரிக்கைக்கு ஏற்ற பணத்தை நாங்கள் வழங்குகிறோம். இதை மீண்டும் அதிகப்படுத்தினால் ரூபாய் தேவைப்படுகிறது.

எனவே இந்த நடைமுறைச் சிக்கல்களை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.”