பஸ் பயணச்சீட்டுகளை வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் பஸ் கட்டணத்தை செலுத்தும் வகையில் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நடத்துநர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும் என்பதால் அவற்றின் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என்றும் பயணிகள் தாங்கள் உள்ளே வரும் இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய சாதனங்களில் தங்களது வங்கி அட்டைகளை செலுத்த வேண்டும் என்றார்.

பஸ்களில் ஜிபிஎஸ் அமைப்பை அணுகும் திறன் கொண்ட புதிய மின்னணு சாதனங்கள் பொருத்தப்படும் என்றும் அவற்றின் மூலம் கட்டணம் அறவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வங்கி அட்டை இல்லாத பயணிகள், சாரதிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் பஸ் கட்டணத்தை பணம் மூலம் செலுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.

பஸ் உரிமையாளரின் அனுமதியுடன் சாரதி தமக்கு தேவையான உதவியாளரை வைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்த அவர், புதிய சாதனங்களை வழங்குவதற்கு மத்திய வங்கி ஏற்பாடு செய்யும் என்றார்.